July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மனித நேயம் மலரட்டும் – கல்வியாளர் இராஜசேகரன்

இறைவன் அருள்பாலிக்க மக்களிடம் மனித நேயம் தழைக்க வேண்டும் !

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் , தேவாலயங்கள் , மசூதிகளில் பூஜைகள் , ஆராதனைகள், தொழுகைகள் சம்பிரதாய வழக்கப்படி ஊரடங்கு உத்தரவைத் தாண்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் மனங்களில் படிந்த அழுக்குகள் , தான் தோன்றித்தனம் , தீய பழக்கவழக்கங்கள் , முறை கெட்ட பணம் பண்ணும் பழக்கம் இறைவனின் கோபத்தை கொப்பளிக்க செய்துள்ளது.ஆலையங்களின் கதவுகள் சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் தடைப்பட்டுள்ளது. சமூக அவலங்களை தாண்டி இன்று அண்ணாநகர் வேலங்காடு மையான பூமியில் நடந்த மனித நேய சம்பவம் உலக மக்களை உற்று நோக்க வைத்திருக்கிறது.

மூன்று முக்கிய திருவிழாக்கள்

கொரானா வைரஸ் தொற்று ஊரடங்கு தளர்வின்றி மே மாதம் 3ம் தேதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் மூன்று முக்கிய திருவிழாக்கள் மக்கள் ஓசையின்றி நகர்கின்றன. தமிழகத்தில் உள்ள 33000 பழங்கால இந்து ஆலையங்களில் தமிழ் புத்தாண்டு தரிசனம் செய்ய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அறுபடை வீடுகள் , நவக்கிரக ஆலையங்கள் , திருவண்ணாமலையார் கோவில் , ஸ்ரீரங்கம் சீனிவாச பெருமாள் கோவில் , மதுரை மீனாட்சி அம்மனும் யாரையும் தரிசிக்க அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் முக்கிய பண்டிகையில் ஈஸ்டர் , ஏசுநாதர் கல்வாரி மலையில் சிலுவையில் அறைந்ததை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளியும் , உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஏந்தி தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் கலந்துகொள்ள இயலவில்லை. ரம்லான் பண்டிகை நோம்பு மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாநோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த நேரத்தில் இறைவன் தந்த எண்ணிலடங்கா அருட்கொடைக்கு நன்றி சொல்லும் தொழுகையை மசூதிகளில் நடத்த முடியவில்லை. நாட்டில் நிலவும் அநியாய அக்கிரமங்களை உணர மக்கள் வீட்டில் இருந்து சுயபரிசோதனை செய்ய கடவுள் பணித்திருப்பதாக நாளும் இறைமார்க்கதில் பயணிப்பவர்கள் உணருகிறார்கள்.

நிறைமனதோடு நித்தம் வழிபடுபவர்கள்

நாளும் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் ஒரு பகுதியை அறப்பணிகளில் செலவழிக்கும் பழக்கத்தை கொண்டவர்கள் தமிழர்கள். இதில் இஷ்ட தெய்வங்கள் , இல்லுறை தெய்வங்களான குல தெய்வம், காடு, வயல், ஊர் காக்கும் காவல்தெய்வங்களும் கொடைகள் நடத்தி கொண்டாடுவார்கள். இவர்களின் இறை மார்க்கம் இயல்பாகவே இரத்தத்தில் பத்தி கலந்துவிட்டதால் இடர்பாடுகளில் கூட வழிபடும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கிறது. ஆன்மிகப் பணியோ , அன்னதான அருட்கொடையோ வாழ்நாள் நிலைக்கும் தலைமுறை திட்டமாகவே இருக்கும். பயனாளிகள் நாளும் வானுயர இவர்களை பாராட்டிக்கொண்டே இருப்பார்கள். அடுத்த தலைமுறையையும் அருகில் வைத்தே சமுக சிந்தனை பயிற்சி வழங்கிவருவார்கள். சமூகத்துக்கான ஆபத்து காலங்களில் இவர்களுடைபெயரை எல்லோரும் அசைபோடுவார்கள். பரந்துவிரிந்த தேசத்தில் இவர்களுடைய எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் இருப்பது வருத்தமே. கொள்கையற்ற கொடூர செயல்களில் இவர்களின் மனம் லயிப்பதில்லை.

கடவுளோடு களபேரம்

பாவச் செயல் , இயற்கை வளச் சுரண்டல் , திருட்டு வழியில் பணம் பண்ணுதல் , பொதுத் சொத்தை சூரையாடுதல் என சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கடவுளை கர்ப்பகிரகத்துக்குள் சென்று தர்சிப்பவர்களாக காட்சி தருகிறார்கள். உண்டியலில் அதிக பணம் குவியும் திருப்பதியில் கோடிகளை கொட்டுபவர்களாக வலம் வருகின்றனர். வாய்ப்பை பயன்படுத்தி தவறாக சம்பாதித்ததை மறைக்க அன்னதானம் செய்வதாக போலியாக விளம்பரப்படுத்தி மகிழ்வார்கள் . தரமற்ற பணம்படைத்தவர்கள் செய்யும் தீய செயலுக்கு ஈடாகவே இறைவனுக்கு உண்டியல் கொடுப்பதாக வேண்டுதல் வாக்குறுதி வழங்குவார்கள். பூசாரிகளின் சமரசப் பணியும் பாவம் செய்த போலி பக்தர்களால் ஏற்பட்ட தெய்வகுற்றங்கள் மனிதர்களை ஆலயங்களை அண்டவிடாமல் அரண் அமைத்துவிட்டது.

தலை நிமிர்ந்த மனிதாபிமானம்.

தமிழகத்தில் கிருமித்தொற்றையும் பசித்தொற்றையும் எதிர்த்து மக்களோடு பணியாற்றி வரும் நேரத்தில் உயிர் காக்கும் மருத்துவப்பணியில் ஈடுபட்ட மூன்று மருத்துவர்கள் கொரானா வைரஸ் தாக்கி மாண்டு விட்டனர். நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சைமன் உயிரிழந்து அவர் உடல் நல்லடக்கம் செய்ய முடியாமல் சமூக கிருமிகள் போராட்டம் நடத்தினர்.

கீழ்பாக்கம் மையான பூமிக்கு எடுத்துச் சென்ற உடல் கடும் எதிர்ப்பால் சென்னை மாநகராட்சி பணியாளர்களால் திருப்பி எடுத்து வரப்பட்டது. தகவலறிந்த அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் M.S முத்துசாமி IPS , மருத்துவர் உடலை அண்ணாநகர் வேலங்காடு மையானத்துக்கு எடுத்துவர மாநகராட்சி பணியாளர்களை அறிவுறுத்தினார். தகவலறிந்த சமூக விரோதிகளும் , பகுதி மக்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தின் கடமையில் கண்ணாக இருக்கும் காவல் துணை ஆணையர் முன்நின்று காவல்படையை களத்தில் இறக்கினார். உருட்டுக்கட்டை தாக்குதல் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு என சமூக விரோத செயல்கள் அரங்கேறின .

துணை ஆணையர் M.S முத்துசாமி IPS

துணை ஆணையரின் நுட்பமான ஆளுமையால் சமூக கிருமிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பாடம் கற்பித்து 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . மனித பிறப்பின் இறுதி உரிமை மறுப்பு பணியில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை அவரோடு அணிவகுத்த காவல் படை அப்புறப்படுத்தி மருத்துவரின் உடலை முன்நின்று நல்லடக்கம்செய்தனர் . உடல் அடக்கத்திற்க்கு பின் பணியில் ஈடுபட்ட காவல் துறை , மாநகராட்சி பணியாளர்களை தனித்தனியாக நேரில் சந்தித்து பாராட்டி அனுப்பி வைத்துள்ளார் . தமிழக மக்களும் , காவல் துறையும் , தமிழக அரசும் துணை ஆணையர் முத்துசாமியின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர் . இவரின் புனித செயலுக்காக தமிழகமே வணங்கி மகிழ்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணைக்கு எடுத்து பிறப்பித்துள்ள உத்தரவில் அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளின்படி இறந்தவர்களின் உடலை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நல்லடக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டும் வலியுறுத்தி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இந்த நிகழ்வு ஊரடங்கு கால வரலாற்று பதிவாக இடம்பெற்று விட்டது. மனிதாபிமானம் , கருணை உள்ளம் , ஈகை குணம் குறைவதால் குற்ற செயல்களும் கொடூர வன்மமும் தலைவிரித்தாடுகிறது. கொரானா தந்த முடக்கம் தன்னிலை உணர்ந்து திருத்தங்களை முன்னெடுக்க வீட்டுக்கு ஒரு முத்துசாமி போன்ற மனம் படைத்தவர்கள் உருவாக வேண்டும் .

மனிதம் மலரட்டும்

இன்று தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சமூகத்திற்க்கு புறம்பான செயல்களை புறந்தள்ளி , இயற்கை தந்த பாடத்தில் நிறை மனிதனாக முயற்சிக்கவேண்டும். உதவ மனமில்லையேல் , பழிக்காமல் அமைதி காக்க வேண்டும். அரக்ககுண அதிகாரத்தை களையெடுத்து நேர்மை செழிக்க பணியாற்ற வேண்டும். பொதுச்சொத்து அபகரிப்பை நிறுத்தி துரோகச் செயலை தவிர்த்தால் சந்ததிகளின் உடல், உள்ள ஊனங்கள் மறையும்.எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் தறிகெட்ட மனநிலையை மாற்றி, உழைப்பில் சமூக சித்தாந்தம் இருக்க வேண்டும் அது வாழ்வாதாரமாக உருவெடுக்க வேண்டும். இறைவன் மீண்டும் கண் திறந்து பார்க்க நற்செயல்கள் தொடங்கட்டும்…

சமூகத்துக்கான வீட்டுச் சிறை விலகி , குணம் உயர்ந்து மனிதமும் புனிதமும் மலரும்…!!

இவரின் முந்தைய கட்டுரையை வாசிக்க https://bit.ly/2zfZf19
பத்திரிகையாளர்
தொடர்புக்கு.
grsekaran1967@yahoo.com

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன் கல்வியாளர், பத்திரிகையாளர் , சமூக ஆர்வலர், மனித வள மேம்பாட்டு ஆலோசகர் என பன்முகத் தன்மை கொண்டவர்

error: Content is protected !!
Open chat