January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்!

 

– முனைவர் தயாநிதி

மின்னஞ்சல் :dayanidi315@yahoo.com

பகுதி-5

எது என் இலக்கு? அதை அடைவது எப்படி?

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் நெப்போலியன் ஹில். அவர் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அதற்காக 16,0000 பேர்களைத் தொடர்புகொண்டார்; சந்தித்து உரையாடினார். அவ்வாய்வின் முடிவில் அவர் இரண்டு உண்மைகளைக் கண்டடைந்தார்.

  1. வாழ்வில் மூன்று விழுக்காடு மக்களே வெற்றிபெறுகின்றனர். மீதமுள்ள 97 விழுக்காடு தோல்வி அடைகின்றனர்.
  2. மூன்று விழுக்காடு மக்கள் தமக்கென உறுதியான இலக்குகளைக் கொண்டிருந்தனர்.

இலக்குகள் நாம் சென்றடைய வேண்டிய இடத்தையும், அதற்கான பயணத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. வாழ்வில் இலக்கு உள்ள மனிதன், தான் பயணிக்க வேண்டிய சரியான திசையைக் கண்டடைகிறான்; இலக்கில்லாதவன் வீணே அலைகிறான்.

ஓர் இளைஞன் நெடுஞ்சாலையில் நடந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரில்ஒரு முதியவர் வந்துகொண்டிருக்கிறார். இளைஞன் முதியவரைப் பார்த்துக் கேட்டான்; ‘இந்த  நெடுஞ்சாலை எங்கே போகிறது…?’ என்று. முதியவர் அவனிடம் திரும்பக் கேட்டார்; ‘நீ எங்கே போகிறாய்….?’ என்று. இளைஞன் சொன்னான்; ‘தெரியாது’.  அதற்கு முதியவர் சொன்னார்; ‘நீ எங்கே போகவேண்டும் என்று உனக்கே தெரியவில்லை. இந்த நெடுஞ்சாலை எங்கே போனால் உனக்கு என்ன?’

நம்மில் பலருக்கு நாம் எங்கே போகவேண்டும் என்ற தெளிவில்லை. அப்படிப்பட்டவரா நீங்கள்? எனில், இன்றிலிருந்து உங்களது இலக்கைக் கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடங்குங்கள். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்முன் பின்வரும் கேள்விகளை, உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அந்த எண்ணங்களோடு உறங்குங்கள். தொடர்ந்து இதனை சிலகாலம் செய்துவாருங்கள். ஒருநாள் உங்களுடைய ஆழ்மனம் இதற்கான விடையைத் தரக்கூடும்.

கேள்விகள்

1. இந்த வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும்?

2. அதை நான் எப்படி அடைவது?

உலகின் ஆகச் சிறந்த நிறுவனங்கள் ஒவ்வொருஆண்டும் SWOT ANALYSIS என்கிற ஆய்வை மேற்கொள்கின்றன. SWOT என்பது பலம் (STRENGTH), பலவீனம் (WEAKNESS), வாய்ப்பு (OPPORTUNITY), அச்சம் (THREAT) என்பவற்றை ஆராய்வது. அதாவது அந்த நிறுவனத்தின் பலங்கள் என்னென்ன, பலவீனங்கள் என்னென்ன, அந்நிறுவனத்தின் முன் உள்ள வாய்ப்புகள்   என்னென்ன, அந்நிறுவனம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் அல்லது அச்சங்கள் என்னென்னஆகிய நான்கு விஷயங்களையும் முறையாக ஆராய்வதே, SWOT ANALYSIS. இத்தகைய ஆய்வு, நிறுவனங்களுக்குப் பொருந்துவதோடு, தனி மனிதர்களுக்கும் பொருந்தும். இன்றைய நாள்களில் வேலைக்கு ஆட்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகளில், தன்னுடைய இலக்கு என்ன என்பதை ஒவ்வொருஇளைஞனும் தெரிவிக்க வேண்டும் என்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அவ்வாறு அவர்கள் சொல்லாதபோது, நேர்முகத்தேர்வை நடத்துபவர்கள், அதனைக் கேட்டு அறிந்து கொள்கிறார்கள். எனில் இலக்கு எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இலக்குகளை முடிவுசெய்வது எப்படி?

இலக்கில்லாதவர்கள் ஆறு மாதகாலம் அல்லது ஓராண்டுக் காலம் தொடர்ந்து ஆராய்ந்து, தமது இலக்குகளைத் தெரிந்துகொள்ளலாம். காலம் வீணாகிறது என்று கவலைப்படாதீர்கள். இலக்கின்றிப் பல ஆண்டுகள் அலைவதைவிட, ‘இதுதான் எனது இலக்கு, இதை அடைந்தே தீருவேன்’ என முடிவுசெய்வதற்காக, ஆறு மாதமோ அல்லது ஓராண்டோ செலவிடுவதால் பிழையில்லை.

இலக்கைத் தீர்மானிப்பதற்கு வேறு ஒரு முறையும் இருக்கிறது. நீங்கள் எதையெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் ஒரு தாளில் பட்டியலிடுங்கள். நீங்கள் எதையெல்லாம் செய்ய விரும்பவில்லையோ அதையும் பட்டியலிடுங்கள். செய்ய விரும்பும் பட்டியலில் இருந்து, உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூன்றை மட்டும் தெரிவு செய்யுங்கள். சில நாள்கள் ஆராய்ந்த பிறகு, அந்த மூன்றில் எது மிகுந்த விருப்பத்திற்கு உரியது என்பதைக் கண்டறிந்து, அதையே உங்களது இலக்காக முடிவு செய்யுங்கள்.

எதைச் செய்தால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்களோ, அதையே உங்களது இலக்காகக் கொள்ளுங்கள். உங்களுடைய இலக்கைத் தீர்மானிப்பதில் மூளையைக்கேட்டுச் செயல்படாதீர்கள்; இதயத்தைக் கேட்டுச் செயல்படுங்கள்.

SMART என்கிற சொல்லை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் அறிவுடைமை அல்லது புத்திசாலித்தனம். உங்கள் இலக்கும் SMART ஆக இருக்கட்டும்.

SPECIFIC:

உங்களது இலக்கை முடிவு செய்யும்போது, ‘இதைத்தான், இந்தத் துறையில்தான், சாதிக்கப்போகிறேன்’ என்பதை மிகத்துல்லியமாக முடிவு செய்து கொள்ளுங்கள். எனது துறை மார்க்கெட்டிங். அதில் மேலாளராக ஆவேன் என்பது துல்லியமான இலக்கு.

MEASURABLE:

உங்கள் இலக்கு அளவிடக்கூடியதாக இருக்கவேண்டும். முதல் ஆண்டில் இந்த இடம், மூன்றாம் ஆண்டில் இந்தப் பதவி, ஐந்தாம் ஆண்டில் இந்த சம்பளம்என்று அளவுகளைத்தீர்மானியுங்கள். குறிப்பிட்ட காலங்களில், அந்தந்தப் பதவிகளை, இடங்களை அடைய முயலுங்கள்.

ACHIEVEABLE:

உங்களுடைய இலக்கு அடையக்கூடிய எல்லா சாத்தியங்களையும் உடையதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, மார்க்கெட்டிங் துறையில் இருந்துகொண்டே, நான் ஒரு IAS ஆவேன் என்பதோ அல்லது  அரசு அலுவலர் ஆவேன் என்பதோ சாத்தியமில்லாதது; நடைமுறைக்கு ஒவ்வாதது.

RELATED:

உங்களுடைய இலக்கு, உங்களுடைய நம்பிக்கைகளுக்கும், மதிப்பீடுகளுக்கும், எண்ணங்களுக்கும் அடிப்படையில் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு தொடர்புடையதாக இருந்தால்தான், அதை அடைவதற்கு முழுமனதோடு உங்களால் முயலமுடியும்.

TIME BOUND:

உங்களுடைய இலக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அடையத்தக்கதாக இருக்க வேண்டும். 25 வயதில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்கிறீர்கள் என்றால், அடுத்த 10 ஆண்டுகளில், அதே துறையில், நீங்கள் எத்தகைய இடத்தை அடையவேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கேற்ப செயல்படுங்கள்.

முடிவு செய்த இலக்கை அடைவது எப்படி?

குறிப்பிட்ட காலங்களுக்குள் அடையத்தக்கதாக உங்களுடைய இலக்கை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

  1. குறுகிய கால இலக்கு (SHORT TERM GOAL):

உங்களது நீண்டகால இலக்கின் முதல் பகுதியாக இதனை அமைத்துக்கொள்ளலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் என்கிற காலத்துக்குள் முடிக்கலாம்.

மார்க்கெட்டிங் துறையில் மேலாளராவது உங்களுடைய நீண்டகால இலக்காக இருந்தால், மார்க்கெட்டிங் துறை சார்ந்த ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேரலாம்.

  1. இடைக்கால இலக்கு (MID TERM GOAL):

அடுத்த கட்டப் பயணம். ஓர் ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என முடிவுசெய்து கொள்ளலாம். வரும் மூன்று ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட பதவியில் பணிபுரிவேன் என்று உறுதி செய்துகொண்டு, அதற்காக முயலலாம்.

  1. நீண்ட கால இலக்கு (LONG TERM GOAL):

இதுவே உங்களுடைய மாபெரும் கனவு.இவ்விலக்கை அடைய 5 அல்லது 10ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.‘இந்தப் பதவியை, இந்த ஊதியத்தை, இத்தனை ஆண்டுகளில் பெறுவேன்’ என உறுதியேற்று அதை அடைவது.

இலக்கை அடைய சில பரிந்துரைகள்:

  1. உங்களுடைய குறுகிய கால இலக்கும், இடைக்கால இலக்கும் நீண்டகால இலக்குடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும். ஒன்றோடு ஒன்று முரண்படக்கூடாது.
  2. உங்களுடைய இலக்கை முடிவுசெய்த பிறகு, அதனை தெளிவாக தட்டச்சு செய்து, நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி அருகிலோ அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்க நேரும் இடத்திலோ ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் உங்களுடைய இலக்கு உங்களது நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும்.
  3. உங்களுடைய எல்லாச் செயல்பாடுகளும், உங்களுடைய நீண்டகால இலக்கை நோக்கியதாகவே இருக்கட்டும்.
  4. ஒருசமயத்தில் ஒரு செயலில் மட்டும் ஈடுபடுங்கள். ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது, உங்களது கவனத்தைச் சிதைத்து, செயல் ஆற்றலைக் குறைத்துவிடும்.
  5. உங்களது இலக்கை அடைவதில் ஏற்படும் சிக்கல்களை, சவால்களாக ஏற்றுக்கொண்டு அவற்றை வெல்ல முயலுங்கள்.
  6. உங்களுடைய வாழ்வின் வசதியான பகுதியிலிருந்து (Comfort zone) வெளியே வந்து, போராடக் கற்றுக்கொள்ளுங்கள்.
  7. இலக்குகளை அடைவதில் விடாமுயற்சி என்பது மிக மிக முக்கியம்.
  8. அடிக்கடி இலக்குகளை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள். தேவைப்பட்டால் சில சிறிய மாற்றங்களை மட்டுமே செய்து கொள்ளலாம்.
  9. உங்களுடைய நீண்டகால இலக்கை, சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொன்றாக அடைவதும் ஒரு சிறந்த வழியே.

உங்களுடைய இலக்கைக் கண்டறிந்து, அதனை வெகு நிச்சயமாய் அடைய வாழ்த்துகள்!

(தொடரும்)

error: Content is protected !!
Open chat