January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்! முனைவர் தயாநிதி

வா வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்!

பகுதி– 6

முனைவர் தயாநிதி

மின்னஞ்சல்:dayanidi315@yahoo.com

 

வெற்றிபெறத் தேவையான மனப்பாங்கை (Attitude) உருவாக்குவது எப்படி?

வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், முதலில் அதற்குத் தேவையான மனப்பாங்கைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்வதற்கோ, ஒருவரிடம் ஒரு கருத்தை முறையாகத் தெரிவிப்பதற்கோ என எல்லாவற்றிற்கும் முக்கியமாகத் தேவைப்படுவது சரியான மனப்பாங்கு மட்டுமே.

மனப்பாங்கு என்பது ஆகச் சிறந்த, ஆனால் சற்று அடர்த்தியான சொல்.

வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், முதலில் தமது மனதை வென்றாக வேண்டும். மனதை வெல்வது என்பது மனதைப் புரிந்து கொள்வதிலேயே இருக்கிறது.வாழ்க்கையில் நடக்கும் எல்லாச் செயல்களையும் நேர்மறையாகப் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டால், மனதில் ஒரு புரிதல் நிகழ்கிறது. அப்புரிதலின் மூலமாக, வாழ்வதும் எளிதாகிறது.

வாழ்க்கை, தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. நொடிதோறும் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் மாறுகிறீர்கள்….. நான் மாறுகிறேன்…. எல்லாம் மாறுகின்றன.

‘மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம்’ என்பது கவியரசு கண்ணதாசனின் அருள்மொழி. பகவான் புத்தரும் இதனையே வலியுறுத்துகிறார். நிறுவனங்களும், வணிக உத்திகளும், அணுகுமுறைகளும், உறவின் தன்மைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதையே நவீன மேலாண்மை ‘மாற்ற நிர்வாகம்’ (Change Management) என்கிறது.

‘என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு; என்னுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிற்கும் நானே பொறுப்பு’ என்று பொறுப்பேற்றுக் கொள்வதே நம் வாழ்வை நம் கையில் எடுப்பதாகும். ‘என்னை மீறி எதுவும் நடந்துவிடாது’ என்கிற தெளிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

வாழ்க்கை மிகவும் குறுகியது. இதில் அடுத்தவர்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவோ அல்லது பேசிக்கொண்டிருக்கவோ நமக்கு  நேரமில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரிடம்,‘நீங்கள் உங்களுடைய எதிரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர் சொன்னார்; ‘எனக்கு அவர்களைப் பற்றி நினைக்க நேரமில்லை….’ எவ்வளவு பெரிய உண்மை!

ஒருவருடைய மனப்பாங்கை உருவாக்குவதில் சுய ஒழுக்கமும் (Self-discipline), சுயகட்டுப்பாடும் (Self-control) பெரும்பங்கு வகிக்கின்றன. ‘நாம் என்ன செய்கிறோம்….. ஏன் செய்கிறோம்’ என்கிற ‘மனத்தெளிவு’ (Conviction) நம்மிடம் உண்டாகிவிட்டால், நம்முள் ஏற்படும் சுயசந்தேகம் (Self-doubt) நம்மைவிட்டு அடியோடு போய்விடும். நாம் செய்வது சரியா? நமது செயல்பாடுகள் சரியான திசையில்தான் செல்கின்றனவா என்கிற சுய சந்தேகங்கள் நம்மைவிட்டு மறைந்துவிடும்.

சரியான மனப்பாங்கை உருவாக்கிக்கொள்ள இரண்டு’F’-களை விட்டுவிட வேண்டும். வேறு இரண்டு ‘F’-களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த 4 F-களில்தான் நமது மனப்பாங்கை வளர்த்தெடுக்கும் சூத்திரம் இருக்கிறது.

நாம் கைவிடவேண்டிய 2 F-கள் FUME& FRET.  FUME என்பது புகைச்சல். FRET என்பது எரிச்சல் அல்லது கவலை. எதற்காகவும் நாம் புகையவோ அல்லது எரிச்சல் அடையவோ கூடாது.

இந்த இரண்டு F-களை வெற்றிபெற, வேறு இரண்டு F-களைப்பயன்படுத்த வேண்டும். அவை FORGIVE & FORGET.FORGIVE என்பது மன்னித்தல்; FORGET என்பது மறத்தல். இதைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்; ‘நமக்கு புகைச்சலையும் எரிச்சலையும் உண்டாக்குகிற எல்லா மனிதர்களையும் மன்னிப்போம்; மறப்போம்’. அதேசமயம் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மட்டும் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கையில் ‘பிழைகள்’ என்று எதுவும் இல்லை; எல்லாமே பாடங்கள்தான்.

‘எத்தனை பிழைகள் செய்துவிட்டேன்’ என்று வருந்துவதைவிட,‘ எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்கிற எண்ணம் வலிமையையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். அத்தகைய எண்ணமே சரியான மனப்பாங்கை உருவாக்கும்.

பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் பாடத்தை நடத்திவிட்டு, பிறகு பரீட்சை வைக்கின்றன; ஆனால் வாழ்க்கை மட்டும்தான், பரீட்சையை முதலில் வைத்துவிட்டு, பிறகு பாடத்தைக் கற்பிக்கிறது.

‘இறைப்பேராற்றல் எல்லோருக்குள்ளும் இருந்து இயங்குகிறது’ என்பதை உண்மையாகப் புரிந்துகொண்டோம் என்றால், ஒருவரையும் நாம் குற்றம் சொல்லமாட்டோம். ஒருவருக்கும் தீர்ப்பு எழுத மாட்டோம். ‘எல்லோருக்கும் நலம் தரக்கூடியதையே இறைவன் செய்கிறான்’ என்கிற நம்பிக்கை எப்போதும் நம்மை நல்வழிப்படுத்தும். எவரேனும் உங்களுக்கு எதிராகச் செயல்படுவதாக உணர்ந்தால், உங்களது கருத்துக்கு மாற்றுக்கருத்துகொண்டிருந்தால் உடனே அவர்களை வாழ்த்துங்கள்; ஒருபோதும் அவர்களை எதிரிகளாகக் கருதாதீர்கள்.

வாழ்க்கையில் வெற்றிபெற இரண்டு பண்புகள் இன்றியமையாதவை. எப்படி ஒரு பறவைக்கு வானில் பறக்க இரண்டு சிறகுகள் இன்றியமையாதவையையோ அப்படியே இவ்விரு பண்புகளும் இன்றியமையாதவை. அவை; ஒன்று விவேகம் என்கிற அறிவு. மற்றோன்று வைராக்கியம் என்கிற மன உறுதி. அறிவும் மனஉறுதியும் இருந்துவிட்டால் ஒரு மனிதன் எதையும் வெல்லமுடியும்.

இவற்றைப்போலவே விடாமுயற்சி என்பதுவும் ஒரு முக்கியமான பண்பு.

ஒரு மனிதன் தான் தொடங்கிய எதையும் முடிக்கும் வரை, தொடர்ந்து என்ன தடைகள் வந்தாலும், துளியும் மனச் சோர்விற்கு இடம் தராமல், தனது இலக்கை அடையும்வரை, எவ்வித சமரசமும் இல்லாமல் போராடுவதே விடாமுயற்சி.

உங்களை நம்பிச் செயல் படுங்கள்; இறைவனை நம்பிச் செயல்படுங்கள். உங்களை நம்புவதும் இறைவனை நம்புவதும் ஒருபுள்ளியில் ஒன்றுதான்.

‘கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் அல்லன்; தன்மீதே நம்பிக்கை இல்லாதவன்தான் நாத்திகன்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும்வரை போராடு’ என்பது சுவாமி விவேகானந்தர் உலகிற்கு அருளிய மந்திரச்சொல்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய் வருத்தக் கூலிதரும்.

 

முயற்சி திருவினை ஆக்கும்; முயன்றின்மை

இன்மை புகுத்திவிடும்.

 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியர்

திண்ணியராகப் பெறின்.

இந்த மூன்று குறள்களும் எனது மனப்பாங்கை வடிவமைத்தன என்றால் அதில் மிகையில்லை.

வேலையில் சேர்ந்த முதல் நாளில் எப்படி இருந்தீர்களோ, அதே மனநிலையோடு வேலையைவிட்டு விடைபெறும் நாளிலும் உங்களால் இருக்க முடிகிறதா என எண்ணிப்பாருங்கள்.

எத்தகைய சூழலிலும், தொடர்ந்து விடாப்பிடியாக, நல்லவர்களாக இருங்கள்; நல்லதையே செய்யுங்கள்; உங்களுக்கு நல்லதே நடக்கும்.

இந்தியாவின் கடைசியில் இருக்கிறது கன்னியாகுமரி என்பது எதிர்மறை எண்ணம். கன்னியாகுமரியிலிருந்துதான் இந்தியா தொடங்குகிறது என்பது நேர்மறை எண்ணம்.

சரியான மனப்பாங்கை உருவாக்கிக்கொள்வது, நமது எண்ணும்  முறையிலேயே இருக்கிறது. சரியான எண்ணங்களை எண்ணி, சரியான மனப்பாங்கை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

(தொடரும்)

 

error: Content is protected !!
Open chat