January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்! – முனைவர் தயாநிதி

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்!

பகுதி – 8

முனைவர் தயாநிதி

மின்னஞ்சல்: dayanidi315@yahoo.com

எண்ணும் ஆற்றலைவளர்த்துக்கொள்வது எப்படி?

இவ்வுலகில் ஏற்பட்டுள்ள எல்லா மாற்றங்களும், முன்னேற்றங்களும் தனிமனித எண்ணங்களிலிருந்துதான் தோன்றின. மனித நாகரிகம் தோன்றி வளர்ந்து அதன் உச்சத்தைத் தொட்டதும், அதேசமயம் மனித மாண்பு சரிந்து வீழ்ந்து நாசமானதும் என்ணங்களால்தான்.

‘வாழ்க்கை என்பதே நல்ல எண்ணங்களால் ஆனது’ என்கிறார் அமரர் எம்.எஸ். உதயமூர்த்தி. இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியில் நடந்தது என்றும், இங்கிலாந்தில் நடந்தது என்றும், ஜப்பானில் நடந்தது என்றும் பலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், முதன்முதலில் இரண்டாம் உலகப்போர் நடந்தது ஹிட்லரின் மூளையில்தான்.

உள்ளம் பெருங்கோயில் என்கிறது சித்தர் வாக்கு. சொர்க்கம் இருப்பதும் நரகம் இருப்பதும் மனிதனின் மனதில்தான். ஜார்ஜ் பெர்னாட்ஷா தனது ஆரம்பகால வாழ்வை, ஓர்அலுவலகப் பணியாளராகத்தான் தொடங்கினார். ஆனால் வாழ்வின் இறுதிவரை அவ்வாறே வாழ்ந்துவிடப்போவதில்லை என்கிற அவரது எண்ணம்தான் அவரை உலகப்புகழ்பெற்ற நாடக ஆசிரியராக உருமாற்றியது.

ரஷ்யாவை வெற்றிகொள்ள வேண்டும் என்கிற எண்ணம்தான் நெப்போலியனின் மனதில் பேராசையாக உருப்பெற்றது. பனிக்காலத்தில் ரஷ்யாவின்மீது படையெடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை அப்பேராசை மறைத்து விட்டது. அதுவே பிரெஞ்சுப் பேரரசரான நெப்போலியனைப் படுகுழியில் தள்ளியது.

உலகின் போக்கை மாற்றியமைத்த எல்லா அறிவியல் மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்ந்ததும் நிகழ்ந்துகொண்டிருப்பதும், நாளை நிகழப் போவதும் மனித சிந்தனையின் வெளிப்பாட்டினால்தான்.

உலகெங்கிலும் உள்ள எந்தப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் ‘எப்படிச் சிந்திப்பது’ என்பதை எவரும் கற்றுத்தருவதில்லை. ஆனால் வளர்ச்சியையும் மாற்றத்தையும் உருவாக்க வேண்டிய மனிதன், சிந்தனையின் மூலம்தான் அவற்றை உருவாக்க வேண்டியிருக்கிறது. கல்வி அறிவிற்கும் சிந்திக்கும் ஆற்றலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து, தமிழகமெங்கும் கல்விப்புரட்சியை நடத்திய பெருந்தலைவர் காமராஜர், பெரிய கல்வியாளர் இல்லை. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸ், பள்ளிக் கல்வியைக்கூட முடிக்கவில்லை. கல்வியறிவு இல்லாமலேயே இத்தகைய பெரும்சாதனைகளை, தங்களது சித்தனை ஆற்றலாலேயே இவர்கள் புரிந்தனர்.

சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதுஎப்படி?

‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்று தொடங்குகிற ஒரு திரைப்பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கேள்வி கேட்கக் கற்றுக்கொள்ளுங்கள். சிந்தனை கேள்வி கேட்பதிலிருந்துதான் பிறக்கிறது. கேள்விகளின்றி, ஆராய்ச்சியின்றி எதையும் வெறுமனே ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்பதில் தவறில்லை. ஆனால் எதைப் பற்றியும் நமக்கென்று ஒரு பார்வை இருக்க வேண்டும். அத்தகைய பார்வை சிந்தனையினாலேயே வரும். தொடர்ந்து சிந்திப்பதன் மூலம் இத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.

எண்ணும் ஆற்றல் என்பது தெரிந்த ஒன்றிலிருந்து (KNOWN), தெரியாத ஒன்றைக் (UNKNOWN) கண்டறியும் பயணம். பாம்புப்புற்று, பாம்புகளால் கட்டப்பட்டதல்ல. உண்மையில் அவை கரையான்களால் கட்டப்பட்டவை. அதேபோலத்தான் நமது வாழ்வும் நமது சிந்தனையால் உருவாகாமல், மற்றவர்களின் சிந்தனையினாலேயே வழிநடத்தப்படுகிறது. புதிய எண்ணங்களை எண்ணுங்கள்; புதிய வாழ்வைத் தொடங்குங்கள்.

புதிய கருத்தாக்கங்களே உலகை ஆள்கின்றன. எல்லாவிதமான விதிகளையும் உடைத்தெறியத் தயாராகுங்கள். எதையும் மாற்றி யோசியுங்கள். சிந்திப்பவர்களே புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடியும்.

 

E.I.D. பாரி என்கிற நிறுவனம் மூன்று கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தபோது, M.V.சுப்பையா என்பவர் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். நட்டத்திலிருந்த அந்நிறுவனத்தை மீட்டெடுப்பது பற்றி, அவர் அந்த நிறுவனத்தின் எல்லா உயர் அதிகாரிகளுடனும் உரையாடினார். எவருடைய பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே அவர் மேலாண்மை நிர்வாகவியல் படித்த பத்து இளைஞர்களைப் பணிக்கு அமர்த்தினார். அவர்களிடம் தாம் இந்த நிறுவனத்தை மூட விரும்புவதாகவும், அதற்கான திட்டத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவரது கூற்று இளைஞர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, அதிர்ச்சியையும் கொடுத்தது. எல்லா நிர்வாக அதிகாரிகளும் வளர்ச்சிக்கான திட்டங்களைத்தான் கேட்பார்கள். ஆனால் இவரோ மூடுவிழா நடத்தத் திட்டம் கேட்கிறாரே என எண்ணி அதிர்ந்துபோயினர். என்றாலும் சிறப்பாக ஆராய்ந்து, அவர்கள் அந்நிறுவனத்தை மூடுவதற்கான வேலைத்திட்டத்தை, அறிக்கையாகச் சமர்ப்பித்தனர். அவ்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட நிர்வாக இயக்குநர்  அந்நிறுவனத்தின் எல்லா மேலாளர்களையும் அழைத்து, அவ்வறிக்கையினை அவர்களிடம் கொடுத்து, அதற்கு நேர் எதிராகச் செயல்படுமாறு கூறினார். நீங்கள் நம்ப மாட்டீர்கள், மூன்று கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்நிறுவனம், மூன்றே ஆண்டுகளில், இருபத்தியொருகோடி ரூபாய் இலாபம் ஈட்டியது. இந்த அதிசயம் நிகழ்ந்தது M.V .சுப்பையா என்கிற ஆளுமையின் மாற்றி யோசிக்கும் ஆற்றலினால்தான்.

ஓர் எண்ணத்தைத் தெரிவு செய்துகொள்ளுங்கள். தொடர்ந்து  அதைப் பற்றியே ஒருவார காலம் தீவிரமாக யோசியுங்கள். இந்த எண்ணத்தை எப்படி வளர்த்து எடுப்பது என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சிறிய தொழிலதிபராக இருந்தால் பின்வருமாறு எண்ணிப்பாருங்கள்; ‘இந்த ஆண்டு புதிதாக ஐம்பது பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க விரும்புகிறேன். இதற்கு நான் என்னென்ன செய்ய வேண்டும்’ என்று சிந்தியுங்கள். நிச்சயமாக அதற்குரிய வழி பிறக்கும்.

மனித மூளையில் இரண்டு பகுதிகள் உள்ளன. இடப்பக்க மூளை நினைவு (MEMORY) சார்ந்தது; வலப்பக்க மூளை படைப்பாற்றல் (CREATIVITY) சார்ந்தது. உங்களது சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க விரும்பினால், வலப்பக்க மூளையை முடுக்கி விடுங்கள்.

நமது கல்வி நிறுவனங்கள் நமது பிள்ளைகளின் நினைவாற்றலை மட்டுமே சோதிக்கின்றன. அவை அவர்களது படைப்பாற்றலை சோதிக்கும் நாளில் எல்லாம் தலைகீழாய்  மாறும்.

திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்வதற்கும், திருக்குறள் போல ஒரு புதிய குறளை எழுதிக்காட்டுமாறு சொல்வதற்கும் மலையளவு வேறுபாடு உள்ளது அல்லவா!

உங்களது எண்ணும் ஆற்றலை வளர்த்து, அதன்மூலம் வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்கி, வெற்றி பெற வாழ்த்துகள்!

(தொடரும்)

 

 

error: Content is protected !!
Open chat