January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்! – முனைவர் தயாநிதி

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்!

பகுதி –  9

முனைவர்  தயாநிதி

மின்னஞ்சல்: dayanidi315@yahoo.com

முடிவெடுக்கும் திறனை (DECISION-MAKING SKILL) வளர்த்துக்கொள்வது எப்படி?

நாம் ஒவ்வொருவரும் நமது அறிவு, அனுபவம், திறன், விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப வாழ்வின் பல்வேறு கட்டங்களில், பல்வேறு முடிவுகளை எடுக்கிறோம். ஒருவர் எடுக்கும் முடிவு இன்னொருவருக்குச்   சரியானதாகத் தோன்றவேண்டியதில்லை. நம்மில் பலர் முடிவெடுக்கும் முன்பாக, நமது நம்பிக்கைக்குரிய சிலரிடம் ஆலோசனை கேட்கிறோம். ஒருவர் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை பெறலாம். ஆனால் இறுதி முடிவு அவருடையதாகவே இருக்க வேண்டும்.

நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக ஒருநாளும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.‘இது நான் எடுத்த முடிவு. இதற்கு 100% நானே பொறுப்பு. இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை முழுமனதுடன் நானே ஏற்றுக்கொள்கிறேன். எனது முடிவுக்காக ஒருநாளும் நான் வருந்த மாட்டேன்’ என்கிற உறுதிமொழியை உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் தனித்தனி இயல்புடையவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆற்றல் இருக்கும். அவரவர் ஆற்றலுக்கேற்ப அவரவர் முடிவுகளை அவரவரே எடுக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அது உங்கள் சொந்த முடிவாக இருக்கட்டும். அடுத்தவர் முடிவுகளில் ஒருநாளும் தலையிடாதீர்கள். பிறர் எடுக்கும் முடிவுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்புவதையே முடிவாக அடுத்தவர் எடுக்க வேண்டும் என ஒருநாளும் எண்ணாதீர்கள்.

காலத்திற்கு ஏற்றாப்போல் முடிவுகளை எடுங்கள். சிக்கல்களைப்பற்றியே எப்பொழுதும் எண்ணிக்கொண்டிருப்பவர்கள், தீர்வுகளைக் கண்டறிவது சிரமம். எனவே சிக்கல்களை விட்டுவிட்டு தீர்வுகளைப் பற்றி எண்ணுங்கள். சில நேரங்களில் முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனைகளைக் கேட்டு உங்களைசிலர் அணுகக்கூடும். அப்போது மற்றவர்களின் கர்மவினையில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களின் கர்மவினையில் தலையிட நமக்கு அனுமதி இல்லை.

‘இதுதான் எனது சிக்கல்’ என்பதை முதலில் கண்டறியுங்கள்.

முடிவுகளை எடுக்கும்போது ஒருபோதும் மூளையிலிருந்து எடுக்காதீர்கள்; இதயத்திலிருந்து எடுங்கள். மூளை தவறு செய்யும்; ஆனால் இதயம் ஒருபோதும் தவறு செய்யாது.

முடிவெடுக்கும்போது நம்மிடம் இரண்டுவிதமான மன நிலைகள் இருக்கும். சிக்கல் உண்டானபோது இருந்த மனநிலை. சிக்கலைத்தீர்க்கும் மனநிலை. சிக்கல் உண்டானபோது இருந்த மனநிலையைத் தாண்டி யோசித்தால்தான் தீர்வு கிடைக்கும்.

ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி முடிவு எடுத்தால், விளைவு ஒரே மாதிரிதான் இருக்கும். விளைவுகள் வேறுமாதிரி இருக்கவேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்களுடைய முடிவெடுக்கும் அணுகுமுறைகளை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.பயண அனுபவம் புதிதாக இருக்க வேண்டுமானால் பாதையை மாற்றுவதுதானே அறிவுடைமை!

இரவு, படுக்கும் முன்பாக சிக்கலுக்கான தீர்வை ஆழ்மனதிடம் விட்டுவிட்டால், இரவு முழுக்க ஆராய்ந்து, காலை எழும்போது அது தீர்வைத்தரும்.

சிக்கல்களைத்தீர்க்க உள்ளுணர்வைப் பயன்படுத்தி முடிவெடுப்பது ஒருமுறை. காரண காரியங்களை ஆராய்ந்து, தேவையான தரவுகளைச் சேகரித்து, அவற்றிற்கேற்ப முடிவுகளை எடுப்பது வேறு ஒருமுறை. உள்ளுணர்வைப் பயன்படுத்தி முடிவு எடுக்கும்போது தனிமனித மதிப்பீடுகளையும், சொந்த அனுபவங்களையும் கொண்டு முடிவெடுக்கிறோம். காரண காரிய அறிவைப் பயன்படுத்தி முடிவெடுக்கும் போது நம்மிடம் உள்ள தரவுகள், காலம், சூழல் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுக்கிறோம்.

முடிவுகள் எடுக்கும்போது  பின்வருவனவற்றைக் கவனியுங்கள்.

முடிவெடுப்பதற்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் சேகரித்துவிட்டீர்களா?

தேவைக்கும் மேலான தகவல்களை நீக்கிவிடுங்கள்.

மிக முக்கியமானவர்களுடன் மட்டுமே கலந்து பேசுங்கள்.

முடிவெடுக்கும்போது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் தராதீர்கள்.

முடிவெடுக்கும்போது எந்த உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தராதீர்கள்.

முடிவெடுக்காமல் இருப்பதைவிட, ஒரு தவறான முடிவுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதே. கடந்த காலங்களில் முடிவே எடுக்காமல் சமாளித்ததையே தனது மிகப்பெரிய முடிவாகக் காட்டிக்கொண்ட ராஜதந்திரிகளையும் வரலாறு கண்டிருக்கிறது. நமது நாட்டில் முடிவெடுக்காத காரணத்தால்,நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் கோடானுகோடி வழக்குகளே முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்தும்.‘தாமதமாக வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்பது நீதித்துறையில் வழங்கப்படும் ஒரு புகழ்மிக்க சொற்றொடர்.

பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து முடித்தபிறகு, ஒரு நிரபராதியை ‘குற்றமற்றவர்’ என்கிறது தாமதமாக வழங்கப்படும் ஒரு தீர்ப்பு. இத்தீர்ப்பால் என்ன பயன்? அந்த நிரபராதி சிறையில் இழந்த ஆண்டுகளை இந்த நீதி மன்றங்களால் திருப்பித் தர இயலுமா?

மேலோட்டமாகப் பார்த்தால் முடிவெடுப்பது என்பது ஒற்றை நிகழ்வாகத்தோன்றும். ஆனால் அது ஏழு படிநிலைகளைக் கொண்ட தொடர் நிகழ்வு. இப்படிநிலைகளைப் பயன்படுத்தி, உங்களுடைய எல்லாச் சிக்கல்களையும் தீர்க்க முடியும். அவை;

எதற்காக நீங்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும்? (காரணத்தைக் கண்டறியுங்கள்).

தேவையான தகவல்களைத் திரட்டுங்கள்.

கண்முன் இருக்கும் மாற்றுத் திட்டங்கள் என்னென்ன?

மாற்றுத் திட்டங்களை நன்கு ஆராயுங்கள்.

மாற்றுத் திட்டங்களில் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.

அதை நடைமுறைப்படுத்திப் பாருங்கள்.

விளைவுகளை ஆராயுங்கள்.

சிறுவயதிலிருந்தே சின்னச்சின்ன முடிவுகளை எடுக்குமாறு குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது முடிவெடுப்பதில் அந்த அனுபவங்கள் உதவியாக இருக்கும்.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகத் தனது போராட்டத்தைத் தொடங்கிய காந்தியாரின் முடிவுதான்,  இந்தியாவின் விடுதலையைத் தீர்மானித்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல யாரோ எடுத்த முடிவு, இன்றுவரை ஈழத் தமிழரின் வாழ்வை, சிக்கலிலேயே நிறுத்தியிருக்கிறது.

மிகச் சிறந்த முடிவுகளை எடுத்து, வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகள்!

(தொடரும்)

error: Content is protected !!
Open chat