January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்!

பகுதி– 11

முனைவர் தயாநிதி

மின்னஞ்சல்: dayanidi315@yahoo.com

உடல் நலத்தைப் பேணுவது எப்படி?

வலுவான உடலே, வலுவான மனதை உருவாக்குகிறது. (Sound body is sound mind)

நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியே நமது மனதை உருவாக்குகிறது என்கிறார் பகவான் ரமண மகரிஷி. வலுவான உடலைப் பேண விரும்புபவர்கள், சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது இன்றியமையாதது. உங்களுடைய உணவில், நிறையக் காய்கறிகளும்  பழங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பசித்தால் மட்டும் உண்ணுங்கள்; தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடியுங்கள்; தூக்கம் வந்தால் மட்டும் தூங்குங்கள். உடல்நலம் பேண விரும்புபவர்களுக்கு இதுஓர் எளிய விதியாகும்.

கடிகாரத்தைப் பார்த்து, உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஓர் உணவுக்கும், அடுத்த உணவுக்கும் இடையில், குறைந்தது இரண்டரை மணி நேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் உண்ட திட உணவு, முற்றிலும் செரித்து, இரத்தமாக மாறுவதற்கு இரண்டரை மணி நேரம் தேவைப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, காலை எட்டுமணிக்கு உணவு உண்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், அடுத்த உணவு பத்தரை மணிக்கு மேல்தான் உண்ணவேண்டும். ஒருவேளை, பத்தரைமணிக்கும் முன்பாக, திட உணவாக நீங்கள் எதையாவது சாப்பிட்டுவிட்டால், உங்களுடைய செரிமான உறுப்பு, காலை எட்டு மணிக்குச் சாப்பிட்ட உணவைச் செரிப்பதை, பாதியிலேயே விட்டுவிட்டு, பிறகு உண்ட உணவைச் செரிக்கத் தொடங்கிவிடும். முதலில் சாப்பிட்ட பாதி செரிமானமான உணவு, கழிவாக உடம்பில் தங்கிவிடும். இதன் காரணமாகவே, ஓர் உணவுக்கும் இன்னொருஉணவுக்கும் இடையில், இரண்டரை மணி நேர இடைவெளி அவசியமாகிறது.

உணவை உண்ணும்போது, வாயை மூடிக்கொண்டு, நன்கு மென்று சாப்பிடுங்கள்.  ஒவ்வொரு கவள உணவும் உமிழ் நீருடன் கலந்து உண்ணப்படவேண்டும். உணவு உண்ணும்போது நீர்குடிக்காதீர்கள். உணவு உண்டு முடித்தபிறகு ஒன்று அல்லது இரண்டு மிடறு நீர் மட்டும் குடியுங்கள். சாப்பிட்டு முடித்தபிறகு, அரை மணி நேரம் கழித்து, நீர் குடியுங்கள். வாயை மூடிக்கொண்டு சாப்பிடும்போது, காற்று உட்செல்வதில்லை. நீரும் காற்றும் உணவு செரிமானமாவதற்குத் தடையாக இருக்கின்றன.

உணவு உண்ணும்போது, தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள்; அலைபேசியில் பேசாதீர்கள்.

எப்போதும் அரை வயிறு மட்டும் சாப்பிடுங்கள். கால் வயிறு தண்ணீருக்கு. கால் வயிறு எப்போதும் காலியாகவே இருக்கட்டும்.

இரவு படுப்பதற்குமுன், இரண்டு மணி நேரம் முன்பாக, இரவு உணவை முடித்துவிடுங்கள். உடல் இளைக்க விரும்புபவர்கள், இயன்றவரை வெறும் பழங்களை மட்டும் இரவு உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நவீன உணவகங்களில் கொடுக்கப்படும் குப்பை உணவு (Junk food) மற்றும் விரைவு உணவை (Fast food) இயன்றவரை தவிர்த்துவிடுங்கள்.

வலுவான உடலைப் பேண விரும்புபவர்கள், நாள்தோறும் ஏதாவது உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வது, மிகவும் இன்றியமையாதது. சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் உள்ளிட்ட யோகப் பயிற்சி,   விரைவு நடைப் பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் போன்ற ஏதாவது ஒன்றை நாள்தோறும் ஒரு மணி நேரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம்.

ஒரு மணி நேரம் செய்ய முடியாதவர்கள், குறைந்தது அரை மணி நேரமாவது செய்ய வேண்டும். படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொண்டே போகலாம். உடற்பயிற்சிக்கூடத்திற்குச் (Gym) செல்வதும் நல்ல பழக்கமே.

நாற்பது வயதிற்கு மேல், உடலில் நோய்கள் உண்டாகும். உடலின் பாகங்கள் வலுவிழக்கத் தொடங்கும். அப்போது வலுவிழக்கும் உடல் உறுப்புகளை எண்ணி நொந்துகொள்ளாதீர்கள் அல்லது புலம்பாதீர்கள். இத்தனை ஆண்டுகாலம் அவை உங்களுக்குச் செய்த தொண்டினை நினைத்துப் பார்த்து, அவற்றிற்கு நன்றி செலுத்துங்கள்.

மருந்தென வேண்டாவா யாக்கைக்கு; அருந்தியது

அற்றது போற்றி உணின்

என்பது குறள். உண்ட உணவு நன்கு செரித்த பிறகு, அடுத்த உணவு உண்டால், அத்தகைய மனிதரின் உடம்பிற்கு, மருந்து என்பது தேவையில்லை என்பது இதன் பொருள்.

இத்தகைய நற்கருத்துகளை உள்வாங்கி, உடலைப் பேண வாழ்த்துகள்!

(தொடரும்)

error: Content is protected !!
Open chat