January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வா… வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்! – முனைவர் தயாநிதி

வா வந்தென் சிறுவிரல் பற்றிக்கொள்!

 

முனைவர் தயாநிதி

மின்னஞ்சல்: dayanidi315@yahoo.com

பகுதி – 12

சில பொதுவான புரிதல்களும் வழிகாட்டுதல்களும்.

அமரர் திரு. கே.பாலசந்தர்  இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்கிற திரைப்படத்தில், ‘ஏழு ஸ்வரங்களுக்குள்……’ என்று ஓர் அற்புதமான பாடல். அமரர் கண்ணதாசன் எழுதியது. அந்தப் பாடல் முழுக்க வாழ்க்கை குறித்த தத்துவார்த்த விளக்கம் விரிந்து கிடக்கிறது.

அதில் இரு வரிகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்;

‘எனக்காக நீ அழலாம்; இயற்கையில் நடக்கும்.

நீ எனக்காக உணவு உண்ண……எப்படி நடக்கும்?’

என்னதான் வாழ்க்கை பற்றிய விளக்கங்களை, ஆயிரமாயிரம் பக்கங்களில் விளக்கினாலும், ஒரு மனிதன் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமல் அதன் புதிர்களை விளங்கிக்கொள்ள முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.

நான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும் படித்த நூல்களிலிருந்தும் எதிர்கொண்ட சவால்களிலிருந்தும் சில பொதுவான புரிதல்களையும் வழிகாட்டுதல்களையும் கண்டடைந்தேன். அவற்றை இன்றளவும் உரிய நேரங்களில் பயன்படுத்தியும் வருகிறேன். அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவற்றில் எவையெல்லாம் உங்களுக்குத் பயன்படும் என்று கருதுகிறீர்களோ, அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். எவையெல்லாம் ஒத்துவராது என்று எண்ணுகிறீர்களோ, அவற்றை விட்டுவிடுங்கள்.

இந்த வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்றாலோ, அல்லது ஏதாவது ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்றாலோ, அதற்குரிய விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

சில தியாகங்களைச் செய்யாமல், சிலவற்றைப் பெறமுடியாது.

உங்களுக்கென்று ஒரு சொந்த வாழ்க்கை இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். இயன்றவரை சமரசங்களின்றி அதை வாழப்பாருங்கள். தொடர்ந்து வாழ்க்கையில் நிறைய சமரசம் செய்துகொள்கிறவர்கள், வாழ்வின் ஒரு கட்டத்தில் வெறுப்பும், கழிவிரக்கமும் அடைய நேரிடும்.

உயிர்த்திருத்தல் (LIVING) என்பதற்கும் வாழ்தல் (SURVIVAL) என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

நீங்கள் தனித்தன்மை உள்ளவர் என்பதையும், உங்களுடைய வாழ்க்கை தனித்துவம் மிக்கது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்களை, உங்களுடய வாழ்க்கையை, ஒருபொழுதும் மற்றவர்களோடும், மற்றவர்களுடைய வாழ்க்கையோடும் ஒப்பிடாதீர்கள்.

மற்றவர்களைப் பற்றி ஒருவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான் என்றால், அவனுக்குப் போதுமான வேலை இல்லை என்றே பொருள். உங்களுக்கென்று நிறைய வேலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். தொடர்ந்து அவற்றில் மூழ்கி விடுங்கள். அப்போது மற்றவர்களைப் பற்றி எண்ணிப் பார்க்க நேரமிருக்காது. மனதுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருங்கள். அதை ‘சும்மா’ இருக்க அனுமதித்தீர்கள் என்றால், அது தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும்; அத்தகைய விடயங்கள் சில நேரங்களில் நமது தலைக்கே ஆபத்தாக முடியும்.

எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள். எதிர்வினை (REACTIVE) செய்பவர்களாக இருக்காதீர்கள். PROACTIVE-வாக இருங்கள்.  PROACTIVE என்றால், வரும்முன்பே காத்துக்கொள்ளும் விழிப்புணர்வுடன் இருத்தல் என்பது பொருள். இதனையே வள்ளுவர்,

‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்’ என்கிறார்.

ஒரு செயல் நடந்துவிட்ட பிறகு, அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்பது REACTIVENESS. ஆனால் ஒரு செயல் நடப்பதற்கு முன்பாகவே, ‘இது இப்படி நடந்தால், இதன் விளைவு இப்படி இருக்கும். இத்தகைய விளைவை இவ்வாறு எதிர்கொள்வோம்’ என எண்ணிப்பார்த்து எச்சரிக்கையாக இருப்பதே PROACTIVENESS.

மனதில் பட்ட எதையும் உடனே செய்யும் பழக்கத்தைப் பயிலுங்கள். ‘நன்றே செய்; இன்றே செய்; அதையும் இப்போதே செய்’ என்பது நமது மூத்தோர்  வாக்கு.

‘நான் சொல்வதை வேறு யாரிடமும் சொல்லாதே’ என்று சில வம்பர்கள் ஆரம்பிப்பார்கள். அவர்கள் ஆரம்பிக்கும்போதே அவர்களிடமிருந்து விலகிவிடுங்கள். இத்தகைய செய்திகளை பொழுதுபோக்கிற்காகக் கூட கேட்காதீர்கள். இத்தகைய வம்பர்கள் உங்களிடம் மட்டுமல்ல, வேறு பலரிடமும் இவ்வாறு வம்பளந்திருப்பார்கள். தொடர்புடைய நபருக்கு வேறு எவரிடமிருந்தாவது செய்தி போகும்போது, நாம் வீண் வம்பில் மாட்டிக் கொள்வோம்.

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கு இடையில்கூட இத்தகைய உரையாடல்களைத் தவிர்த்து விடுங்கள்.நம்மிடமிருந்துதான் நமது குழந்தைகள் நல்லதையும் கேட்டதையும் கற்றுக்கொள்கிறார்கள்.

கடவுள் என்பது அவரவர் சொந்த விடயம். அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை.

‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்கிறது ஒரு பழம் பாடல்.’எவன் கடவுளைக் கண்டுகொண்டுவிட்டேன் என்கிறானோ, அவன் கடவுளைக் காணவில்லை; எவன் கண்டுவிட்டானோ, அவன் அதுபற்றிப் பேசவில்லை’ என்பதே இதன் பொருள்.

ஆனால் எனது அனுபவம் சார்ந்தும் அறிவு சார்ந்தும் நம்பிக்கை சார்ந்தும் கடவுள் பற்றிக் கருத்துத் தெரிவிக்க இயலும்.  இது வெறும் பரிந்துரைதான்.

உங்களுடைய அறிவைக் கொண்டும் அனுபவத்தைக் கொண்டும் கடவுளைக் கண்டறிவது உங்களுடைய பொறுப்பு.

என்னைப் பொறுத்தவரையில் என்வாழ்வில் கடவுளைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. நம்பிக்கையின் ஊடாகவும், நம்பிக்கையின்மையின் ஊடாகவும்  பயணித்து நான் அடைந்த இடம்தான் கடவுள்.

என்னை நான் கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  ‘என்செயலாவது யாதொன்றும் இல்லை; இனி எல்லாம் உன்செயல் என்று உணரப் பெற்றேன்’ என்பது பட்டினத்து அடிகளின் வேதவாக்கு. எனக்கும் அப்படித்தான்.

நமது சொந்த முயற்சியும், கடவுளின் பேரருளும் இணையும்போது நாம் வெற்றி பெற்றுவிடுகிறோம்.

எதையும் முயன்று பாருங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுடைய முயற்சிக்கு கடவுளின் அருள் இருக்கிறதா என ஆராய்ந்துகொண்டே இருங்கள். கடவுளின் அருள் இருக்கிறது என்றால், உங்களுடைய முயற்சி தங்கு தடையில்லாமல் தொடரும். எங்காவது உங்களுடைய முயற்சி தடைப்படுகிறது எனில், கடவுளின் அருள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைப்பேராற்றல் உங்களுக்கு உதவவேண்டும் என வேண்டுகிறேன். இத்தொடரினை மிகுந்த பொறுமையுடன் படித்த வாசகர்களாகிய உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இத்தொடரை வெளியிட்ட இவ்விணையதளத்தின் தலைமை நிர்வாகிக்கும் இதனைத் தொடர்ந்து வெளியிட உதவி செய்த நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும் நன்றி கூறி இத்தொடரை நிறைவு செய்கிறேன்!

நன்றி, வணக்கம்!

குறிப்பு:

உங்களுக்கு ஐயங்கள் இருப்பின் எழுதுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: dayanidi315@yahoo.com

error: Content is protected !!
Open chat