தென்காசி மாவட்டத்தில் மானியத்தில் நுண்ணீர் பாசன துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ளசெய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறையுள்ள மாநிலம் என்பதால், கிடைக்கும் பாசன நீரினை சிக்கனமாக பயன் படுத்திடவும், குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபழ மேற் கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், சொட்டு நீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் போன்ற நுண்ணீர்ப் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு / குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் அளித்து வருகிறது.
பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, விவசாயிகள் நுண்ணீர்ப்பாசன முறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணை நிலை நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்திற்கு குழாய்க் கிணறு / துளைக் கிணறு அமைக்க 160 எண்களும், டீசல் பம்புசெட் / மின் மோட்டார் பம்புசெட் அமைக்க 499 எண்களும், நீர்பாசன குழாய் அமைக்க 1362 எண்களும், நீர்த்தேக்க தொட்டி அமைக்க 110 எண்களும் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குழாய்க்கிணறு / துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.25,000ம், டீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத தொகை ரூ.15,00-த்திற்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதத் தொகை ஹெக்டருக்கு ரூ.10,000-க்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு, அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000-க்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
More Stories
மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது-கமல்ஹாசன்
அசத்தல் மொய் கலக்கிய மதுரை தம்பதி
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது