January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பால்வளத்துறைக்கு தனி அமைச்சகம் -பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

பால்வளத்துறைக்கு தனி அமைச்சகம், பால்வளத்துறை சார்ந்தவர்களுக்கு “தேசிய விருது”, இந்தியா முழுவதும் பாலில் கலப்படம் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை” தேசிய பால் தினத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

குடிநீர், மருத்துவம் இவற்றுக்கு அடுத்தபடியாக உயிர் காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தைப் பெற்று இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக திகழ காரணமான விளங்கிய “வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26ம் தேதி ஆண்டுதோறும் நமது தேசத்தின் பால் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்று, உலகளாவிய பால் உற்பத்தியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கவும், “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மனதில் கொண்டு தன்னலம் கருதாமல் வெயில், பனி, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், சமூக விரோதிகளால் எந்த ஒரு பாதிப்புகள் வந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கு தடையற்ற சேவையை நித்தமும் வழங்கி வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் “தேசிய பால் தினம்” நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்தியாவில் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில் பொதுமக்கள் அருந்தும் பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்வது உண்மை தான் என்கிற அதிர்ச்சிகரமான தகவலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து ஆண்டுகள் பல கடந்த போதும் பொதுமக்களுக்கு கலப்படமற்ற, தரமான பால் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் இன்னும் உறுதிபடுத்தாத நிலை தான் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி பால்வளத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் சுதேசி நிறுவனங்களும், கூட்டுறவு அமைப்புகளும் நலிவடைந்து போவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையே இந்தியா முழுவதும் இருப்பதால் பால்வளத்துறை சார்ந்த விவசாய பெருமக்கள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கவும், மருத்துவ வசதிகள் செய்து கொள்ளவும் இயலாத சூழ்நிலையே நிலவுகிறது.

உயிர் காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பாலினை உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும், பொதுமக்களுக்கு தரமான, கலப்படமற்ற வகையில் விநியோகம் செய்வதை உறுதி செய்திடவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் தரமான பால் கிடைத்திடவும் மத்திய, மாநில அரசுகள் இனியாவது போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில், உற்பத்தியில் இந்தியா முழுவதும் தன்னலம் கருதாமல் செயல்பட்டு வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் நலன் காத்திடும் வகையிலும், பால் உற்பத்தியையும், பால் விநியோகத்தையும் ஊக்குவிக்கின்ற வகையிலும், அதனை பாதுகாக்கின்ற வகையிலும் மத்திய அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய கெளரவம் அளித்து வரும் நிலையில் பால்வளத்துறை சார்ந்தவர்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடத்தி வருவது இத்துறை சார்ந்த எங்களுக்கு சொல்லெனா துயரை தருகிறது.

இந்தியா முழுவதும் பால் உற்பத்தியில், பால் விநியோகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் நலப்பணியாற்றி வரும் பால் முகவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு “வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் “தேசிய பால் தினம்” அன்று “தேசிய விருது” வழங்கி கெளரவப்படுத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசுக்கு அனைத்து மாநில அரசுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரிக்கை.

 

error: Content is protected !!
Open chat