பலத்த காற்று மற்றும் மழையின் போது பயிர்களை பாதுகாத்துக்கொள்வத எப்படி? என்பது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்; டாக்டர் கீ.சு.சமீரன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது, குறிப்பாக தென்காசி மாவட்டத்திலும் கனமழை மற்றும் சூறைக்காற்று தொடர்பாக வானிலை முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால் வாழை, வெங்காயம், மிளகாய், சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களுடைய பயிர்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தி சாகுபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டைநகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து இழப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
கனமழை மற்றும் சூறைக்காற்று தொடர்பாக வானிலை முன்னறிவிப்பு செய்யப்பட்டால் அதற்கு 4 நாட்களுக்கு முன்பு தென்னந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால் வேர்ப்பகுதி மண்ணில் இறுகி மரம் சாய்ந்து விடாமல் பாதுகாக்கும். தென்னை மரங்களில் உச்சியில் அதிகமான கிளைகள் இருப்பின் அதனை குறைத்திட ஏதுவாக அந்த ஓலைகள் மற்றும் மட்டைகளை நீக்குவதால் தென்னைமரம் அதிக காற்றினால் சாய்வதைத்தடுக்கலாம்.
வாழை, மரவள்ளி, பப்பாளி, மா, பலா, மற்றும் முந்திரி உள்ளிட்ட மரங்களின் இடையே காற்று புகுந்து செல்லும் வகையில் பக்கவாட்டு கிளைகளையும், அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்துவிட வேண்டும். கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண் நோய் பரவாமல் தடுக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலவையை பூசவேண்டும்.
இந்த மரங்களுக்கு சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் கம்புகளைக் கொண்டு ஊன்று கோல் அமைக்க வேண்டும். இடை பருவ அறுவடைக்குத் தயாராக இருக்கும் மரங்களில் அறுவடை மேற்கொள்ளலாம். கத்திரி, தக்காளி, மிளகாய், போன்ற காய்கறிபயிர்களுக்கு வயல்களில் மழைநீர் தேங்கியிருந்தால், தண்ணீரை வடித்து வடிகால் வசதியை நன்றாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்குடில்களின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக் குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடப்பட்டு, காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். நிழல் வலைக்குடில்களில் கிழிந்து போன நிழல் வலைகளைத் தைத்து சரி செய்ய வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய், சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3250-ம், வெங்காய பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1020-ம் மற்றும் மிளகாய் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1075-ம் செலுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் தங்களுடைய பயிர்களை உடனடியாக பயிர்க்காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
More Stories
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்
சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சிறப்பு மருத்துவ முகாம்