அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்?
வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி
சென்னை:
”அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்?” என அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும் அக்கட்சியின் முக்கிய பிரமுகருமான பெங்களூரு புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை என அவர் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை மேடையில் வைத்துக் கொண்டே தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவையும் அ.தி.மு.க. இணைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இவரது இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களிடம் இருந்து இன்னும் எந்த ரியாக்ஷனும் வராத நிலையில் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் இருந்து பதிலடி வந்திருக்கிறது.
செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய புகழேந்தி, ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற நபர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும், அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற இவர் யார்? எனவும் வெளுத்து வாங்கினார். மேலும், குருமூர்த்திக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? எனவும் வினவினார்.
இதேபோல் சசிகலாவை புகழும் வகையில் கோகுல இந்திரா அப்படி பேசியிருக்கக் கூடாது என்றும், இதேபோல் அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இணைய வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறிய கருத்தையும் கட்சி ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார். சொந்தக் கட்சியை சேர்ந்த அமைச்சர் மற்றும் அமைப்புச் செயலாளரின் கருத்தை பெங்களூரு புகழேந்தி உதாசீனப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்னும் ஓரிரு வாரங்களில் விடுதலையாக உள்ள சூழலில் வெளியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரது வருகைக்கு பிறகு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்து வருகின்றன.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்