விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு
வாஷிங்டன்:
வரும் ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுக்க தலைநகர் வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் முன்வைத்தார். பைடனின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க டிரம்ப் பல முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், அதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
கடைசி முயற்சியாக,ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் உட்பட ஐவர் உயிரிழந்தனர். டிரம்பின் தூண்டுதலாலேயே இந்த வன்முறைச் சம்பவம் நடைபெற்றுள்ளதால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசர நிலை பிரகடனம்:
அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவிலும் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்றும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால், கலவரம் மீண்டும் ஏற்படாமல் இருக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஜனவரி 21ம் தேதி வரை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திலும் பாதுகாப்புக்காக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசியப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் வாஷிங்டனுக்கு பதவியேற்பு தினம் வரை சுற்றுலா பணிகள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். ஜனவரி 6ம் தேதி நடந்த வன்முறைக்குப் பின், பென்ஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
தலைநகர் வாஷிங்டனுக்கு வரும் விமானங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாஷிங்டனில் விமானப் போக்குவரத்திற்கும் அடுத்த வாரம் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த வாரம் முதல் ஜனவரி 20ம் தேதி வரை தலைநகரில் மக்கள் கூடுவதைத் தடுக்க ஹோட்டல்களை மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வன்முறைச் சம்பவங்கள் ஜோ பைடன் அதிபராக பதவியேற்றதும் முடிவுக்கு வராது என்றும் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டிரம்ப் மக்களிடையே பரப்பிய வெறுப்புவாதம் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், மக்கள் மனதிலிருந்து வெறுப்புவாதத்தை நீக்கும் வரை வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்