அனைத்து கட்சி தலைவர்களை பால் முகவர்கள் சந்திக்க முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24.01.2021 ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் தலைமை வகிக்க, மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் டி.எம்.எஸ்.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாநில அமைப்புச் செயலாளர் திரு. எஸ்.முருகன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அவசர நிர்வாகக்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1) தமிழகத்தில் நாளொன்றுக்கு 84% (சுமார் 1கோடியே 25லட்சம் லிட்டர்) பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்பு கொடுத்து, ஓரளவிற்கேனும் லாபம் வழங்கி வருகையில் நாளொன்றுக்கு வெறும் 16% (சுமார் 25லட்சம் லிட்டர்) மட்டும் விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மொத்த விநியோகஸ்தர்கள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் (C/F) எனும் இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே பால் முகவர்களுக்கு விநியோகம் செய்வது, உழைப்பிற்கேற்ற வருமானம் வழங்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதால் தான் ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் உயர்ந்த அளவு கூட விற்பனை உயராமல் இருக்கிறது. பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்பும், உழைப்பிற்கேற்ற வருமானமும் வழங்காத வரை ஆவின் பால் விற்பனை உயர்வு என்பது சாத்தியமில்லை. எனவே தனியார் நிறுவனங்கள் போன்று ஆவின் நிறுவனமும் பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்பும், உழைப்பிற்கேற்ற வருமானமும் வழங்கிட தமிழக அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
2) தினசரி அதிகாலை நேரத்தில் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் (Use By Date) அன்றைய தின தேதியும், 7.00மணிக்கு மேல் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் மறுநாள் தேதியும் என இரண்டு விதமான தேதி அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் குழப்பமடைய நேரிடுவதோடு பால் முகவர்களும், சில்லறை வணிகர்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே ஒரே நாளில் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் உபயோகிக்கும் தேதி இரண்டு விதமாக அச்சிடாமல் ஒரே தேதியை மட்டுமே அச்சிட்டு விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுத்து அதனை ஆவின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
3) தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்திலும், உற்பத்தியிலும் சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் அவர்களின் நலன் காத்திட தமிழக அரசு பால்வளத்துறைக்கு தனிநலவாரியம் அமைக்க வேண்டும், மருத்துவ, விபத்து காப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை சுமார் 13ஆண்டுகளாக முன் வைத்து வந்தும் இதுவரை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. அழுத குழந்தை தான் பால் குடிக்கும் என்கிற நிலையில் மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அழக்கூட இயலாத சூழ்நிலையிலேயே இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நடப்பாண்டிலேயே நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) தமிழகத்தில் நாளொன்றுக்கு 16% பாலினை கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் விவசாய பெருமக்களை மட்டுமே பால் உற்பத்தியாளர்களாக கவனத்தில் கொண்டு கொள்முதல் விலை மற்றும் பொதுமக்களுக்கான விற்பனை விலையை நிர்ணயம் செய்யும் தமிழக அரசு 84% பாலினை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாய பெருமக்களை பால் உற்பத்தியாளர்களாகவே கவனத்தில் எடுக்காமல் இருப்பதும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல. எனவே இனியாவது வரும் காலங்களில் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாய பெருமக்களையும் கவனத்தில் கொண்டு அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலை மற்றும் பொதுமக்களுக்கான விற்பனை விலை இரண்டையும் அரசே நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்
மேற்கண்ட 4 தீர்மானங்களையும் தமிழக அரசு பரிசீலித்து அதனை நடப்பாண்டிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இருவரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பால் முகவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அவர்களின் தேர்தல் அறிக்கையில் சேர்த்திடவும், அவர்களது கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வாக்குறுதி அளிக்க வலியுறுத்திடவும் கோரி மனு அளிப்பது என்கிற தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
5) மேலும் மக்கள் உறங்கும் நேரத்தில் கண்விழித்து பால் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்க நேர்கிறது. அந்நேரங்களில் உடல் உறுப்புகள் இழப்பு ஏற்படுவதோடு சில நேரங்களில் உயிரிழப்புகள் வரை போவது கூட நடைபெறுகிறது. எனவே எதிர்பாரா வகையில் மரணமடையும் பால் முகவர்கள் குடும்பத்தினருக்கு 6மாத ஊக்கத் தொகையை இழப்பீடாக சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனங்கள் வழங்கிட வலியுறுத்துவது என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.குமார், துணை ஒருங்கிணைப்பாளர் எம். சக்திவேல், மாநில அமைப்புச் செயலாளர்கள் எஸ்.தாழமுத்து, ஜே.அபுபக்கர், இணைச் செயலாளர் ஆத்திதுரை, துணைச் செயலாளர் எஸ்.பால்துரை, மக்கள் தொடர்பாளர் த.ராமானுஜம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குமார் எஸ்.எம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்