October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

முதல்வருக்கு மின்னஞ்சலில் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

முதல்வருக்கு மின்னஞ்சலில் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிட “பால்வளத்துறை நலவாரியம்” அமைத்திட வேண்டும்”.
-தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் வாயிலாக பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

தொழிலாளர்களின் நலன்களை பேணிக் காப்பதில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தில் கடந்த 5ஆண்டுகாலமாக செயலிழந்து போயிருந்த கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தை திருத்தி அமைத்து, அவ்வாரியத்தின் தலைவராக பொன் குமார்  நியமனம் செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகம், விற்பனை மற்றும் உற்பத்தியில் தமிழகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரம், தொழில் பாதுகாப்பு, குடும்ப ஆரோக்கியம் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் பால்வளத்துறைக்கு தனிநல வாரியம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் துறை சார்ந்த அமைச்சர்களாக இருந்த கருப்பசாமி, சிவபதி, மாதவரம் மூர்த்தி, ரமணா, ராஜேந்திர பாலாஜி ஆகியோரை நேரில் சந்தித்தும், தமிழக முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பதிவு தபால் வாயிலாகவும், முதல்வர் தனிப்பிரிவிலும் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை எங்களது சங்கத்தின் சார்பில் தொடர்ந்து முன் வைத்து வந்திருக்கிறோம்.

ஆனால் எங்களது மனு மீது குறைந்தபட்சம் பரிசீலனை கூட செய்யப்படாமல் கிடப்பில் போட்டதோடு தமிழக அரசின் கூட்டுறவு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் மேற்கொள்ளப்படும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை வாயிலாக எப்படியெல்லாம் ஊழல் செய்து முறைகேடுகளை அரங்கேற்றலாம் என அரசு சொத்துக்களையும், கூட்டுறவு நிறுவனமான ஆவின் சொத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டனரே தவிர பால்வளத்துறை சார்ந்த பல லட்சம் குடும்பங்களின் நலன் மீது கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை. இந்நிலையில் நிகழ்ந்துள்ள ஆட்சிமாற்றம் எங்களுக்கு நிம்மதியையும், சற்றே நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

ஏனெனில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலவாரியங்களை உருவாக்கி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்பட்டதை நாங்கள் நன்கறிவோம். அந்த வகையில் தற்போது தந்தையின் வழிபற்றி ஆட்சி நடத்தும் தாங்கள் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகம், விற்பனை மற்றும் உற்பத்தியில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வரும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என மனதார நம்புகிறோம்.

தண்ணீரில் அழும் மீன்களின் கண்ணீரை எவரும் அறியார். அது போலவே மக்கள் சேவையில் மனநிறைவை கண்டு வந்தாலும் அத்துறையில் இருந்து மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கடந்த கால அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை.

எனவே தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தோடு தனியார் பால் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு தேவையான பால் தேவைகளை தங்குதடையின்றி பூர்த்தி செய்து வருவதால் ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி பால்வளத்துறையில் விநியோகம், விற்பனை, உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பல லட்சம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களின் வயிற்றில் பால் வார்க்க உடனடியாக “பால்வளத்துறை நலவாரியம்” அமைத்திட வேண்டுமாய் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தங்களை தாழ்மையுடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

பின் குறிப்பு:- மேற்கண்ட மனு தமிழக முதல்வர் அவர்களுக்கும், முதல்வரின் தனிச் செயலாளாருக்கும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளோம்.

சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

error: Content is protected !!
Open chat