January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரபியா ஷைபியின் கொடூரகொலைக்கு நீதி வேண்டும்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லி, சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரபியா ஷைபி என்பவர் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வந்த நிலையில், ஆகஸ்ட் 26 – ந்தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, இளம்பெண் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் டெல்லி மட்டுமன்றி இந்திய தேசம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதத்தன்மை, ஈவு, இரக்கம், கருணை சற்றுமின்றி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொடூரமான முறையில் உடலை சிதைத்து வெறிச்செயலில் ஈடுபட்ட கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும். தனக்கு நடந்தால் மட்டும் தான் அது கொடுமையான சம்பவம் அல்லது நம் பகுதியையோ, ஊரையோ சார்ந்தவர்களுக்கு நடந்தால் மட்டும் தான் அது கொடுமையாக பார்க்கப்பட வேண்டிய சம்பவம் என்பதில்லை. மனித உயிர்களை, சித்திரவதை செய்து, கொடூர கொலை செய்யும் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் எங்கு நடந்தாலும் வேடிக்கை பார்க்காமல் எதிர்த்து குரல் கொடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

டெல்லி நிர்பயா வழக்கின் வடுக்களே இன்று வரை தேசமெங்கும் ஆறாத நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் இந்தியாவில் பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? கடுமையான சட்டங்களோ, தண்டனைகளோ இல்லாமல் குற்றவாளிகள் தப்பிப்பிழைக்க முடியும் என்றால் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது யார்?

குற்றத்தை ஒப்புக்கொண்டு நிஜாமுதீன் சரணடைந்தாலும், ரபியாவின் கொடூரக்கொலைக்கு நியாயம் வழங்க வேண்டியது தேசத்தின் கடமை. கொலை தொடர்பாக நடைபெறும் விசாரணை நியாயமான முறையில் அமைய வேண்டும். நேர்மையான விசாரணைக்கு பிறகு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட எவராயினும் பாரபட்சமின்றி அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதித்து, நாட்டில் இனி எந்தவொரு பெண்ணும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்காதவாறு உரிய நீதி வழங்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்

ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்

error: Content is protected !!
Open chat