உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடாகவும் இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடைபெறும் மத்திய அரசின் வேலை வாய்ப்பு விழாவின் ஒருபகுதியாக சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் பணிநியமன பயிற்சி மையத்தில் இன்று (22.11.2022) 250 பேருக்கு அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்பாதுகாப்புத்துறை, பாரத ஸ்டேட் வங்கி, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், தபால், ரயில்வே, வருமான வரி, தகவல் ஒலிபரப்பு உட்பட 14 துறைகளில் இளைஞர்களுக்கு வேலை நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் எல் முருகன், இன்றைய வேலை வாய்ப்பு விழா வரலாற்று சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டார். செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாக அவர் கூறினார்.
பணி நியமனங்களை பெற்றுள்ள இளைஞர்கள், எளிமை, பொறுப்புணர்வு, கடமை உணர்வு, திறன் வளர்ச்சி, வருங்காலத்தை தீர்மானிக்கும் உணர்வு ஆகியவற்றுடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். இரட்டை என்ஜின் செயல்பாடு உள்ள மாநிலங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நோக்கிய அமிர்தகாலத்தின் போது உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் பயணத்தை தொடங்கியிருப்பதாகவும், இதனை மனதில் கொண்டு நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த இலக்கை நோக்கிய தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு செயல்படுவதாகவும் டாக்டர் எல் முருகன் கூறினார்.
பணிநியமன ஆணைகள் பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினார்
More Stories
முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு…கே.எஸ்.ஆர்
சிலையை அகற்றிய தாசில்தார் , டி.எஸ்.பி மாற்றம்
இளம் விஞ்ஞானிகளை மேம்படுத்த தேசிய பிரைன்ஸ்டோர்மிங் அமர்வு