மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியைச் சேர்ந்தவர் கந்து (எ) காந்திலால் (வயது 35). இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் தனது கூட்டாளியான பர்னு அம்லியர் என்பவருடன் சேர்த்து கூட்டு பாலியல் வன்முறை செய்ததாக ஒரு பெண் புகார் அளித்தார்.
2018ம் ஆண்டு ஜன.18ம் தேதி அப்பெண் அளித்த புகாரில், பைக்கில் லிப்ட் தருவது போல காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் பின்னர் தனது நண்பர் பர்னு அம்லியரிடம் ஒப்படைத்த போது அவர் தனக்கு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி 6 மாத காலம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த கந்துவையும், அவரது கூட்டாளியையும் 2020 டிச.23ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். ரத்லம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்த இவ்வழக்கு கடந்த ஆண்டு அக்.10ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இவர்கள் இருவர் மீதான குற்றங்களுக்கு சரியான ஆதாரங்களைக் கொண்டு அரசு தரப்பால் நிரூபிக்க முடியாமல் போனது. இதனால் 666 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு கந்துவும் அவரது கூட்டாளியும் விடுவிக்கப்பட்டனர்.
சிறையை விட்டு வெளியே வந்த கந்து தன் மீது போலி பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிந்து சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால் அதற்கு இழப்பீடாக ரூ. 10 ஆயிரத்து 6 கோடி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், “சிறையில் இருந்த 666 நாட்களும் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அனுபவித்தேன். வெயிலுக்கும் குளிருக்கும் தகுந்த உடை இல்லாமல் கொடுமையான நாட்களை சந்தித்தேன். சிறைவாசத்திற்கு பிறகும் எனக்கு உடல் உபாதைகள் தொடர்கின்றன. தோல் நோய், அலர்ஜி, நிரந்தர தலைவலி என அவதிப்படுகிறேன். 6 பேர் அடங்கிய எனது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே ஆள் நான்தான். எனது வருமானம் இன்றி உள்ளாடைகளைக்கூட வாங்கி பயன்படுத்தக் கூட முடியாமல் குடும்பத்தினர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். கடவுளின் ஆசிர்வாதத்தால் விடுதலை ஆகி இருக்கிறேன். தொழில் இழப்பு, நற்பெயர் இழப்பு, உடல் வலி, மன வலி இவற்றால் என் வாழ்க்கை பாழாகி விட்டது. இந்த போலி வழக்கால் ‘மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்து விட்டேன்’. இதற்காக மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
நெட்-ஜீரோ ஃபியூச்சர் ப்ரூஃப் பில்டிங் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்
ஐநா அமைதிப் படையின் 75வது சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது